மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள்
அல்லாஹ்வின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது நேர்மையுடனும் உறுதியுடனும் நேரான வழியில் நடக்க விரும்பும் ஒவ்வொரு உண்மையான முஸ்லிமின் அடிப்படை நோக்கமாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: எவர்கள், எங்கள் இறைவன் அல்லாஹ் தான் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ திண்ணமாக அவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்களிடம் கூறுகின்றார்கள்: அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியனால் மகிழ்ச்சியடையுங்கள்! இந்த உலகவாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம். மேலும் (சுவனத்தில்) உங்கள் மனம் விரும்பியதெல்லாம் உங்களுக்கு இருக்கிறது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம்; உங்களுக்குக் கிடைக்கும். இது பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் உள்ள இறைவனிடமிருந்து கிடைக்கும் விருந்தாகும்!
(41:30-32)
திண்ணமாக எவர்கள், அல்லாஹ்தான் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நின்றார்களோ அவர்களுக்கு எவவித அச்சமும் இல்லை, அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள். இத்தகையவர்களே சுவனம் செல்பவர்களாவர். உலகில் அவர்கள் செய்து கொண்டிருந்த செயல்களின் பலனாக அதில் அவர்கள் நிரந்தரமாக வாழவார்கள்.
(46:13,14)
இந்த வசனங்களிலிருந்தும் இதுபோன்ற மற்ற வசனங்களிலிருந்தும் மார்க்கத்தில் உறுதியுடன் இருப்பதனால் ஏற்படும் சில நன்மைகளை நாம் பெறமுடிகின்றது. அவை வருமாறு:
1- அல்லாஹ்வுடன் ஒரு நிரந்தரத் தொடர்பு ஏற்படுவதோடு உள்ளத்திற்கு அமைதியும் மனதிற்கு நிம்மதியும் ஏற்படுகின்றது. எவ்வாறென்றால் உறுதியாக இருப்பவன் அல்லாஹ்வின் கடமைகளை அறிந்து அதன் பிரகாரம் அவன் திருப்திகொள்ளும் விதத்தில் அவன் நடந்து கொள்கின்றான்.
2- உறுதியாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் புகழ் கிடைக்கின்றது. எவர்கள், அல்லாஹ் எங்கள் இறைவன் என்று கூறி பின்னர் அதில் உறுதியாக நிலைத்து நிற்கின்றார்களோ... அதாவது எவர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கட்டுப்பட்டு அவன் காட்டிய வழியில் சொல்லாலும் செயலாலும் தூய்மையாக நடந்தார்களோ...என்று அல்லாஹ் அவர்களைப் புகழ்கின்றான்.
3- மரண நேரத்தில் இத்தகையவர்கள் மீது வானவர்கள் இறங்குகின்றார்கள். மேலும் அவர்கள் தம் கப்ருகளிலிருந்து வெளிவரும்போது, மறுமைக்காக நீங்கள் செய்தவற்றுக்காகவும் உலகத்தில் நீங்கள் விட்டுவந்த சொத்து, சுகம் மற்றும் பிள்ளைகள்; குடும்பத்தார்களுக்காகவும் நீங்கள் பயப்படவோ கவலைப்படவோ தேவையில்லை என்று அவ்வானவர்கள் நற்செய்தி கூறுவார்களாம்.
4- அல்லாஹ்வால் வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் அவர்களுக்கு உண்டு என்ற வானவர்களின் நற்செய்தி கிடைக்கும். ''உங்களுக்கு வாக்களிக்கப்பட்டிருக்கும் சுவனத்தின் நற்செய்தியினால் மகிழ்ச்சியடையுங்கள்'' என்று அவ்வானவர்கள் கூறுவார்கள்.
40:30
5- இவ்வுலகிலும் மறுவுலகிலும் வானவர்களின் துணை கிடைக்கும். இவ்வுலகில் அவர்கள் பாவங்களிலும் தவறுகளிலும் விழுந்து விடாதவாறு வானவர்கள் பாதுகாப்பார்கள். மேலும் அவர்களை நெறிப்படுத்துவார்கள். மறுமையில் அவர்கள் கப்ரிலிருந்து வெளிவரும்போது சுவனம் செல்லும் வரை அவர்களை அவ்வானவர்கள் வரவேற்பார்கள். ''இந்த உலக வாழ்விலும் மறுமையிலும் நாங்கள் உங்களுக்கு உற்ற துணையாய் இருப்போம்''. (அல் குர்ஆன்)
6 உறுதியாக இருப்பவர்களுக்கு அல்லாஹ்வின் அருளால் சுவனத்தில் அவர்களுடைய உள்ளங்கள் எதை விரும்புகின்றனவோ அவர்களுடைய கண்களுக்கு எது குளிர்ச்சியாக இருக்கின்றதோ அவர்களுடைய நாவுகள் எதைக் கேட்கின்றனவோ அவை அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும் என்று அல்லாஹ் வாக்களித்துள்ளான். ''உங்கள் மனம் விரும்பியதெல்லாம் அதில் உங்களுக்கு இருக்கின்றது. அதில் நீங்கள் கேட்பதெல்லாம் உங்களுக்கு க் கிடைக்கும்''. (அல் குர்ஆன்)
7- இந்த உறுதிப்பாடு, அல்லாஹ்வுக்குப் பிறகு அவர்களைப் பாவங்களிலும் மோசமான காரியங்களிலும் விழுந்துவிடாமல் பாதுகாப்பதோடு மோசமான மக்களுடன் கூட்டுச் சேர்வதைவிட்டும் வணக்க வழிபாட்டில் சோம்பல் காட்டுவதை விட்டும் அவர்களைப் பாதுகாக்கும்.
உறுதிப்பாட்டிற்கான வழிமுறைகள் என்ற இந்த தலைப்பின் முக்கியத்துவம் பல விஷயங்களில் அடங்கியுள்ளது. அவற்றுள் சில:
தற்போது இஸ்லாமிய சமுதாயம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. மார்க்கத்தில் பலவகையான சந்தேகங்களும் அவரவர் தம் மனோஇச்சையின்படி நடந்துகொள்ளலாம் என்ற நிலையும் உருவாகியிருக்கின்றது. இதன் காரணமாக மார்க்கம் நூதனமாக ஆகிவிட்டதோடு அதைப் பின்பற்றக்கூடியவர்களும் நபி(ஸல்) அவர்கள் கூறியதைப் போல ஒரு நூதனமான உதாரணத்தைப் போலாகிவிட்டனர். அதாவது மக்களிடம் ஒரு காலம் வரும். அப்போது மார்க்கத்தைப் பற்றிப்பிடிப்பவர் நெருப்பைப் பற்றிப்பிடிப்பவரைப் போல் ஆகிவிடுவார்.(நபிமொழி)
கடந்த காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களை விட இன்றைய முஸ்லிம்களுக்குத்தான் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகள் அதிகம் தேவைப்படுகின்றன என்பதில் அறிவுடையோர் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது. இவ்வுறுதியைப் பெறுவதற்கு கடுமையான உழைப்பு தேவைப்படுகிறது. காரணம் காலம் கெட்டுக்கிடக்கின்றது. உண்மையான சகோதரர்கள் மிகவும் அரிதாக இருக்கிறார்கள். உதவக்கூடியவர்கள் பலவீனமாகவும் ஒத்துழைக்கக்கூடியவர்கள் குறைவாகவும் இருக்கிறார்கள்.
அல்லாஹ் தன்னுடைய வேதத்திலும் தன்னுடைய நபியின் நாவின் மூலமாகவும் அவர்களுடைய வரலாற்றின் மூலமாகவும் மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான அநேக வழிமுறையை நமக்கு தெளிவுபடுத்தியிருக்கின்றான். இது அல்லாஹ் நமக்களித்த அருட்கொடையாகும். அவற்றில் சில:
1- திருக்குர்ஆனின் பக்கம் திரும்புதல்
மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கான வழிமுறைகளில் திருக்குர்ஆன் தான் முதலாவதாக உள்ளது. எவர்கள் திருக்குர்ஆனை இறுகப் பற்றிப்பிடித்துக்கொண்டார்களோ அவர்களை அல்லாஹ் (குழப்பங்களிலிருந்து) பாதுகாப்பான். அதன்வழி நடப்பவர்களை (தீமைகளைவிட்டும்) காப்பாற்றுவான். அதன் பக்கம் அழைப்பவர்கள் நேரான வழியில் நிலைத்திருப்பார்கள்.
இந்தத் திருக்குர்ஆன் படிப்படியாக கொஞ்சம் கொஞ்சமாக இறக்கியருளப்பட்டதின் நோக்கமே உறுதியாக இருப்பதற்குத்தான் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான். இறைநிராகரிப்பாளர்களின் ஆட்சேபனைக்குப் பதிலளிக்கும் விதத்தில் பின்வருமாறு கூறுகின்றான்: இவருக்கு இந்தக் குர்ஆன் முழுவதும் ஒரே நேரத்தில் மொத்தமாக ஏன் இறக்கப்படவில்லை? என்று நிராகரிப்போர் கேட்கிறார்கள், இதன் மூலம் உம் இதயத்தை உறுதிப்படுத்துவதற்காகத்தான் நாம் இப்படி படிப்படியாக இறக்கியிருக்கிறோம். அவர்கள் உம்மிடம் எந்த விஷயத்தையும் கேட்டு வந்தபோதெல்லாம் அதற்குரிய சரியான விடையையும் அழகான விளக்கத்தையும் நாம் உமக்கு அளித்தோம்.
(25:32,33)
திருக்குர்ஆன் மனித உள்ளங்களில் ஈமானை விதைக்கின்றது. அல்லாஹ்வுடன் தொடர்பு ஏற்படுத்துவதன் மூலம் உள்ளங்களைத் தூய்மைப்படுத்துகின்றது. மட்டுமல்லாமல் காஃபிர்கள், நயவஞ்சகர்கள் போன்ற இஸ்லாத்தின் விரோதிகள் எழுப்புகின்ற சந்தேகங்களுக்கு மறுப்புக் கொடுக்கின்றது. இதனால் தான் திருக்குர்ஆன் உறுதிப்பாட்டிற்கு அடிப்படையாக விளங்குகின்றது.
2- மார்க்கத்தைப் பற்றிப்பிடிப்பதோடு நற்காரியங்களைச் செய்ய வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: முஃமின்களுக்கு அல்லாஹ் ஒர் வலுவான வாக்கின் அடிப்படையில் இம்மையிலும் மறுமையிலும் உறுதிப்பாட்டை அருளுகின்றான். ஆனால் அக்கிரமக்காரர்களை வழிதவறச் செய்கின்றான். அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.
(14:27)
அதாவது அல்லாஹ் முஃமின்களுக்கு நன்மையைக்கொண்டும் நற்காரியங்களைக் கொண்டும் இவ்வுலகிலும் கப்ரிலும் உறுதிப்பாட்டை வழங்குவான் என்று கதாதா(ரலி) அவர்களும் மற்ற அநேக நபித்தோழர்கள், தாபியீன்கள், தபவுத்தாபியீன்களும் இவ்வசனத்திற்கு விளக்கமளித்துள்ளனர்.
மற்றொரு வசனத்தில், அவர்கள் தங்களுக்கு அறிவுறுத்தப்பட்டபடி செயலாற்றுவார்களேயானால் அது அவர்களுக்கு மிக நன்மை அளிப்பதாகவும் சத்தியத்தில் அவர்களை நன்கு உறுதிப்படுத்தக்கூடியதாகவும் இருந்திருக்கும் என்றும் கூறுகிறான்.
(4:66)
ஆம்! உண்மைதான்! இல்லையென்றால் குழப்பங்கள் தலைதூக்கி துன்பங்கள் தொடரும்போது நற்காரியங்கள் செய்யாமல் சோம்பேறியாக இருப்பவர்களிடமிருந்து உறுதிப்பாட்டை நாம் எதிர்பார்க்க முடியுமா என்ன?!
ஆனால் எவர்கள் ஈமான் கொண்டு நற்காரியங்கள் செய்கின்றார்களோ அவர்களை அல்லாஹ் அவர்களின் ஈமான் காரணமாக நேரான வழியில் நிலைத்திருக்கச் செய்கிறான். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் நற்காரியங்களை இடைவிடாமல் தொடர்ந்து செய்து வந்தார்கள். நற்காரியங்கள் குறைவாக இருந்தாலும் தொடர்ந்து செய்வதுதான் அவர்களுக்கு மிகப் பிரியமாக இருந்தது.
3- நபிமார்களின் வரலாறுகளிலிருந்து படிப்பினை பெறவேண்டும்.
ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்: (நபியே!) இறைத்தூதர்களின் வரலாறுகளிலிருந்து நாம் எடுத்துக்கூறும் இந்நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றும் எப்படிப்பட்டவை என்றால், அவற்றின் மூலம் நாம் உம் இதயத்தை உறுதிப்படுத்துகிறோம். மேலும் இவற்றில் உமக்கு சத்தியத்தைப் பற்றிய அறிவும் கிடைத்தது. இறைநம்பிக்கையாளர்களுக்கு இவற்றில் அறிவுரையும் நினைவூட்டலும் இருக்கின்றன.
(11:120)
இப்படிப்பட்ட வரலாறுகளைக் கூறும் வசனங்கள் நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் விளையாட்டுக்காகவோ ரசனைக்காகவோ இறக்கியருளப்படவில்லை. மாறாக நபி(ஸல்) அவர்களுடைய உள்ளத்தையும் முஃமின்களின் உள்ளங்களையும் உறுதிப்படுத்தும் உயர்ந்த நோக்கத்திற்காகத்தான்.
4- பிரார்த்தனை செய்வது
உறுதிப்பாட்டை வழங்குமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யவது அவனுடைய அடியார்களான முஃமின்களின் பண்பாகும்.
இறைவா! எங்களை நீ நேர்வழியில் செலுத்திய பின்பு எங்கள் இதயங்களை நேர்வழியிலிருந்து பிறழச் செய்துவிடாதே!.
இறைவா! நீ எங்களுக்கு பொறுமையைத் தந்தருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக!
என்று அவர்கள் பிரார்த்தனை செய்யவேண்டும். நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு அதிகமதிகம் பிரார்த்தனை செய்வார்கள்: உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! எனது உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதிப்படுத்துவாயாக. (திர்மிதி)
5- அல்லாஹ்வை திக்ரு செய்ய வேண்டும்
உறுதிப்பாட்டுக்கான காரணங்களில் இது முக்கியமானதாகும். திக்ரு இதயத்திற்கு உணவாகவும் ஆன்மாவுக்கு மருந்தாகவும் அமையும். இது முஸ்லிமுக்கு அவனுடைய இறைவனோடு தொடர்பை ஏற்படுத்துகிறது.
6- சரியான பாதையில் செல்வதில் கவனம் செலுத்த வேண்டும்
சரியான, ஒரே பாதையில் செல்வதுதான் ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். அதுதான் சுன்னத் வழி, சரியான கொள்கையுடையவர்களுடைய பாதையாகும். மேலும் அதுதான் சரியான வழியாகவும், ஆதாரத்தையும் நபிவழியையும் பின்பற்றுவதாகவும் அமையும்.
மேலும் அடிப்படை ஈமானில் ஸ்திரமாக இருந்து அதற்கேற்ப நமது வாழ்வையும் சிந்தனையையும் அமைத்துக் கொள்ளவேண்டும். அப்போது அக்கொள்கை நமது உள்ளத்தில் ஒரு மாபெரும் அந்தஸ்தைப் பிடித்துக் கொள்ளும். மேலும் நமது உள்ளத்தில் அல்லாஹ்வைப்பற்றிய, அவனுக்கே உரித்தான கண்ணியம், மகத்துவத்தைப் பற்றிய சரியான விளக்கமும் ஏற்படும்.
அதுபோல மலக்குகளைப்பற்றிய நம்பிக்கையிலும் ஸ்திரமாக இருக்கவேண்டும். மலக்குகள் அல்லாஹ்வின் படைப்புகளில் ஒரு படைப்பு. அல்லாஹ் அவர்களை தன்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளான். ''அவர்கள் இரவு பகல் எந்நேரமும் அவனைப் புகழ்ந்து துதிபாடிக் கொண்டே இருப்பார்கள் சோர்வடைய மாட்டார்கள்''.
(21:20)
அவர்களில் ஆதமுடைய மக்களைப் பாதுகாக்கக்கூடியவர்கள் இருக்கிறார்கள். நன்மை தீமைகளை எழுதக்கூடிவர்கள் இருக்கிறார்கள். சுவனத்தைப் பாதுகாக்க கூடியவர்களும் நரகத்தைப் பாதுகாக்கக் கூடியவர்களும் இருக்கிறார்கள். அவர்களில் சிறந்தவர் வஹீயைக் கொண்டு வரக்கூடிய ஜிப்ரீல்(அலை) ஆவார். மனித உள்ளங்களின் வாழ்வே அந்த வஹீயைக் கொண்டுதானே அமைந்திருக்கின்றது! அவர்களில் சூர் ஊதக்கூடிய இஸ்ராஃபீலும் ஒருவராவார்.
அதுபோல மறுமையைப் பற்றிய நம்பிக்கையிலும் ஸ்திரமாக இருக்கவேண்டும். மேலும் அதனுடைய பயங்கரங்களை நினைவுக்குக் கொண்டு வரவேண்டும். ''அந்நாளில் அனைத்துலகின் அதிபதியின் முன்னால் மாந்தர்கள் அனைவரும் நின்று கொண்டிருப்பார்கள்''.
(83:6)
அந்நாள் குற்றம் புரிந்தவர்களுக்கும் அகம்பாவம், ஆணவத்துடன் நடந்தவர்களுக்கும் கேவலமான நாளாகும். அந்நாளில் முஹம்மது(ஸல்) அவர்களைத் தவிர ஒவ்வொரு மனிதனும் என்னைக் காப்பாற்று என்னைக் காப்பாற்று என்றே கூறிக்கொண்டிருப்பான். நபி(ஸல்) அவர்கள் தம் இறைவனிடம் மக்களுக்காக பரிந்துரை செய்யக்கூடியவர்களாக இருப்பார்கள்.
அதுபோல வேதங்களைப்பற்றிய நம்பிக்கையிலும் ஸ்திரமாக இருக்கவேண்டும். வேதங்களில் திருக்குர்ஆன், தவ்ராத், இஞ்சீல், ஸபூர், இப்ராஹீம்(அலை), மூஸா(அலை) அவர்களுடைய ஏடுகள் ஆகியவையும் அடங்கும்.
அதுபோல விதியைப் பற்றிய அதனுடைய நன்மை தீமை, இனிப்பு, கசப்பு ஆகியவை பற்றிய நம்பிக்கையிலும் ஸ்திரமாக இருக்கவேண்டும். அதாவது இவ்வுலகில் நடந்த அல்லது நடக்கின்ற அல்லது இனி நடக்கக்கூடிய ஒவ்வொன்றும் அல்லாஹ் நிர்ணயித்த விதியின் பிரகாரமே அமைந்திருக்கின்றது. அல்லாஹ்வின் விதியிலிருந்து எதுவும் வெளியேறிவிட முடியாது என்று நாம் உறுதியாக அறிந்து கொள்ளவேண்டும்.
ஏனெனில் உண்மையில் நாம் நமது உள்ளத்தில் அடிப்படைக் கொள்கையை நிலைநிறுத்தி அதன் அர்த்தங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வோமேயானால் அத்துடன் அதன் பிரதிபலிப்பு நமது நடத்தையிலும் வெளிப்படுமேயானால் அது நம் உள்ளத்திற்குப் புதிய வாழ்வை சிறந்த வாழ்வைக் கொடுக்கும். அதன் காரணமாக நம்முடைய வணக்க வழிபாடுகள் மறுமையைப் பற்றிய சிந்தனையும் மகத்தான நம் இறைவன் முன்னால் நாம் நிற்கின்றோம் என்ற உணர்வும் கூடிய தாக்கங்கள் உடையதாக அமையும். மட்டுமல்லாமல் தீயவற்றை அதிகமாகத் தூண்டக்கூடிய ஆரோக்கியத்தைக் கெடுக்கக்கூடிய தீய எண்ணங்களையே நாடக்கூடிய உள்ளத்தோடு போராடக்கூடிய களத்தில் நாம் இருக்கிறோம் என்று நாம் எண்ணிக் கொள்ள வேண்டும்.
7- பயிற்சி பெறுதல்
ஈமானியப் பயிற்சி, சிந்தனைப் பயிற்சி, விழிப்புணர்வுப் பயிற்சி, படிப்படியான பயிற்சி இவையெல்லாம் உறுதிப்பாட்டுக்கான அடிப்படைக் காரணங்களாகும்.
ஈமானியப் பயிற்சி
இப்பயிற்சி அல்லாஹ்வைப் பற்றிய பயம், அவனை நேசித்தல், அவனிடத்தில் கூலியை எதிர்பார்த்தல் போன்றவற்றின் மூலம் நம் உள்ளத்திற்கும் மனசாட்சிக்கும் புத்துயிரைக் கொடுக்கும்.
சிந்தனைப் பயிற்சி
இது சரியான ஆதாரத்தின் அடிப்படையில் அமையக்கூடிய பயிற்சி. ஒரு நிலையற்ற கொள்கை, பிறரை கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதன் அடிப்படையில் இருக்காது.
விழிப்புணர்வுப் பயிற்சி
அதாவது குற்றம் புரிவோரின் பாதையில் செல்லாமல் இஸ்லாத்தின் விரோதிகளின் திட்டங்களைப் புரிந்து, யதார்த்தத்தை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். மேலும் நடக்கின்ற சம்பவங்கள், நிகழ்ச்சிகளின் உண்மை நிலையைச் சூழ்ந்தறிந்து நன்கு எடைபோட்டுக் கொள்ள வேண்டும்.
படிப்படியான பயிற்சி
தகுந்த முன்னேற்பாடின்மை, அவசரப்படுதல், குறுக்கு வழியில் செல்லுதல் ஆகியவை இல்லாமல் சரியான திட்டத்தோடு இப்பயிற்சி ஒரு முஸ்லிமை படிப்படியாக உயர்வின்பால் கொண்டு செல்கின்றது.
உறுதிப்பாட்டிற்கான வழிமுறைகளில் ஒன்றான பயிற்சி பெறுதல் என்ற இவ்வழிமுறையின் முக்கியத்துவத்தைத்; தெரிந்து கொள்ள நபி(ஸல்) அவர்களுடைய வரலாற்றின் பக்கம் நாம் திரும்ப வேண்டும். மக்காவில் காபிர்களின் துன்பங்களுக்கும் தொல்லைகளுக்கும்; ஆளான நபித்தோழர்களின்; உறுதிக்கு அடிப்படையாக இருந்தது எது? என்று நம்மை நாமே கேட்டுக் கொள்ளவேண்டும். நபியவர்களின் உறுதியான பயிற்சி இல்லாமல் அவர்களுக்கு உறுதிப்பாடு கிடைத்திருக்க முடியுமா?
கப்பாப் பின் அரத்(ரலி) அவர்களை எடுத்துக் கொள்வோம். சத்தியத்தை ஏற்றதற்காக அவர்களுடைய எஜமானர்கள் இரும்புப்பாளங்களை நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவர்களை வெற்றுடம்பாக அதில் தூக்கிப்போட்டார்களே! அந்நேரம் அவர்களுடைய முதுகில் உள்ள கொழுப்பு உருகும்போது அந்நெருப்பையே அணைத்துவிட்டது! இவ்வனைத்தையும் தாங்கிக்கொண்டு அவர்களைப் பொறுமையோடு இருக்கச் செய்தது எது?
அதுபோல பிலால்(ரலி) அவர்களை சுடுமணலில் கிடத்தி அவர்கள்மீது பெருங்கல்லைத் தூக்கி வைத்தார்கள். சுமையா(ரலி) அவர்கள் விலங்குகளாலும் சங்கிலிகளாலும் கட்டப்பட்டார்கள். நாம் காணும் இந்தப் பயிற்சி இல்லாதிருந்தால் இத்தோழர்கள் உறுதியாக இருந்திருக்க முடியுமா? எண்ணிப்பார்க்க வேண்டும்.
8- செல்கின்ற பாதையைப் பற்றிய உறுதியான நம்பிக்கை வேண்டும்
ஒரு முஸ்லிமுக்கு தான் செல்கின்ற பாதையைப் பற்றிய உறுதியான நம்பிக்கை அதிகரிக்க அதிகரிக்க அப்பாதையில் அவன் மிக உறுதியோடு இருப்பான் என்பதில் சந்தேகமில்லை.
அதுபோல நாம் செல்கின்ற இந்நேரிய பாதை நமக்கு முன்னால் நபிமார்கள், உயிர்த்தியாகம் செய்தவர்கள், நல்லோர்கள், உண்மையாளர்கள், மார்க்க அறிஞர்கள் சென்ற பாதையாகும் என்ற உணர்வும் நமக்கு வரவேண்டும். அப்படியானால் நாம் இப்பாதையில் அன்னியர்களாகவோ தனிமைப்படுத்தப்பட்டவர்களாகவோ இருக்கமாட்டோம். மாறாக நமக்குத் துணை கிடைக்கும்.
நமது கவலை சந்தோஷமாக மாறும். ஏனெனில் அந்த நபிமார்கள், நல்லோர்கள் யாவரும் நம் சகோதரர்களாக இப்பாதையில்; இருக்கின்றார்கள் என்ற உணர்வு நமக்கு இருக்கின்றதே! மேலும் மற்ற மனிதர்கள், ஏனைய படைப்புகளில் அல்லாஹ் நம்மைத் தேர்ந்தெடுத்து நமக்கு சிறப்பை வழங்கியுள்ளான் என்ற உணர்வும் நமக்கு வரவேண்டும். அல்லாஹ் கூறுகிறான்:
புகழனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியது! அவன் தேர்ந்தெடுத்த அவனுடைய அடியார்கள் மீது சாந்தி உண்டாவதாக!.
(27:54)
அல்லாஹ் நம்மை ஜடப்பொருளாகவோ, கால்நடைகளாகவோ, விலங்குகளாகவோ அல்லது காபிர்களாவோ பித்அத்தின் பக்கம் அழைக்கக்கூடியவர்களாகவோ, பாவிகளாகவோ, இஸ்லாத்தின் பக்கம் அழைக்காத முஸ்லிம்களாகவோ அல்லது தவறான வழியில் செல்லக்கூடிய அழைப்பாளர்களாவோ படைத்திருந்தால் நம்முடைய உணர்வு எப்படி இருந்திருக்கும்? அவ்வாறெல்லாம் இல்லாமல் அல்லாஹ் நம்மை யாவரை விடவும் சிறந்தவர்களாகத் தேர்ந்தெடுத்து சிறந்த அழைப்பாளர்களாக ஆக்கியிருக்கிறான் என்ற உணர்வே நம்முடைய வழியில் நாம் உறுதியாக இருப்பதற்கான ஒரு வழிமுறைதானே! என்பதை சிந்திக்க வேண்டாமா?
9- அழைப்புப்பணியில் தொடர்ந்து ஈடுபடவேண்டும்.
உள்ளம் செயல்படவில்லையென்றால் அது துருப்பிடித்துவிடும். எனவே உள்ளம் செயல்படுவதற்குச் சிறந்த களம் அழைப்புப் பணிதான். ஏனெனில் இப்பணி இறைத்தூதர்களின் பணியாகும். நாம் நம் உள்ளத்தை அல்லாஹ்வுக்கு வழிப்படுவதில் ஈடுபடுத்தவில்லையானால் அது நம்மைப் பாவத்தில் ஈடுபடுத்திவிடும். ஈமான் கூடும், குறையும்.
அழைப்புப்பணிக்கு மகத்தான கூலியிருப்பதோடு அது உறுதிப்பாட்டிற்கான வழிமுறைகளில் ஒன்றாகவும் அமைகின்றது. ஏனெனில் முன்னேறிச் சென்று தாக்கக்கூடியவன் தன்னைக் காத்துக் கொள்ளத்தேவையாக மாட்டான். அல்லாஹ் அழைப்பாளர்களுடன் இருக்கின்றான். அவன் அவர்களை உறுதிப்படுத்துகின்றான். அவர்களின் பாதங்களை ஸ்திரப்படுத்துகின்றான். அழைப்பாளன் ஒரு மருத்துவரைப் போலாவான். அவரோ தனது அறிவால், திறமையால் நோயுடன் போராடுகின்றார்.
10- ஸ்திரமான சில அடிப்படை அம்சங்களைப் பற்றிப் பிடித்துக்கொள்ள வேண்டும்
அந்த அடிப்படை அம்சங்களின் தன்மைகளைப் பற்றித்தான் நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்: மக்களில் சிலர் நன்மைகளின் திறவுகோல்களாகவும் தீமைகளின் பூட்டுக்களாகவும் திகழ்கின்றார்கள் (இப்னுமாஜா)
எனவே உலமாக்கள், நல்லோர்கள், அழைப்புப் பணி செய்யும் முஃமின்கள் ஆகியோரைத் தேடிச்சென்று அவர்களைப் பற்றிப் பிடித்துக்கொள்வது உறுதிப்பாட்டிற்கு மிகப்பெரும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு செய்கின்றபொழுது இங்கு இஸ்லாமிய சகோதரத்துவம் உறுதிப்பாட்டிற்கு அடிப்படை அம்சமாக வெளிப்படுகின்றது. ஏனெனில் நல்லோர்களாகவும் முன்னோடிகளாகவும் நம்மைப் பக்குவப்படுத்தக்கூடியவர்களாகவும் இருக்கின்ற நம்முடைய அந்த சகோதரர்கள் தாம் நம்பாதையில் நமக்கு உதவியாகவும் நாம் ஒதுங்கும் உறுதியான உறைவிடமாகவும் இருப்பார்கள். தம்மிடமுள்ள திருக்குர்ஆன் வசனங்கள், நுட்பம், விவேகம் போன்றவற்றைக் கொண்டு நம்மை உறுதிப்படுத்துவார்கள். எனவே நாம் அவர்களைச் சார்ந்தே வாழவேண்டும்.
நாம் பிரிpந்து தனியாகச் சென்று விடக்கூடாது. ஏனெனில் ஷைத்தான்கள் நம்மைப் பறித்துக் கொண்டு போய்விடுவார்கள். தனிமையில் மேயும் ஆட்டைத்தான் ஓநாய் கபளிகரம் செய்கின்றது. அதுபோல தாங்களும் சீர்திருத்தவாதிகளாக நடந்து கொள்வதோடு மற்றவர்களையும் சீர்திருத்தம் செய்யக்கூடிய நல்ல நண்பர்களை எடுத்துக்கொள்வதும்; உறுதிப்பாட்டுக்கான மிக முக்கியமான வழிமுறையே. ஏனெனில் இப்படிப்பட்ட சிறந்த நண்பர் தன் சகோதரனுக்கு கல்வியைத் தேடுவதற்கும் இறை வழிபாட்டுக்கும் உதவி செய்வார். மேலும் அவனுடைய வணக்கவழிபாட்டிலும் சரி அல்லது அவனுடைய நடத்தையிலும் சரி அவனிடம் ஏற்படக்கூடிய தவறுகளைச் சுட்டிக்காட்டுவார்.
11-அவ்வாஹ்வின் உதவியையும், எதிர் காலம் இஸ்லாத்திற்கே என்றும் நம்ப வேண்டும்
12-அசத்தியம் எது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அதனால் ஏமாற்றம்
அடைந்துவிடக்கூடாது.
அல்லாஹ் கூறுகிறான்: உலகின் பல பகுதிகளில் (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவர்களின் நடமாட்டம் உம்மை ஒருபோதும் ஏமாற்றத்தில் ஆழ்த்திவிட வேண்டாம். இது(சில நாள் வாழ்க்கையின்) அற்ப இன்பம் தான். பிறகு அவர்கள் சேருமிடம் நரகமேயாகும். எத்துணை இழிவான தங்குமிடம் அது!
(3:196,197)
13- உறுதிப்பாட்டிற்கு உதவும் நற்குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
இவற்றில் தலையாயது பொறுமை. நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்: பொறுமையைவிடச் சிறந்த விசாலமான வெகுமதி யாருக்கும் வழங்கப்படவில்லை. (புகாரி, முஸ்லிம்)
14- நல்ல மனிதரின் அறிவுரை தேவை.
அதாவது நல்லோர்களின் அறிவுரைகளைப் பெறுவதற்கு ஆர்வம் காட்டவேண்டும். அப்படிப்பட்ட அறிவுரைகள் கூறப்பட்டால் அவற்றை சிந்தித்துச் செயல்படவேண்டும்.
பயணத்தில் ஏதாவது சங்கடங்கள் நிகழ்ந்துவிடும் என்று நாம் அஞ்சினால் முன்னதாக நாம் நல்லோர்களின் அறிவுரைகளைத் தேடிக்கொள்ள வேண்டும்.
சோதனைகள் ஏற்படும்போதும் அல்லது நாம் எதிர்நோக்குகின்ற சோதனைகள் ஏற்படும் முன்பும் அறிவுரைகளைத் தேடிக்கொள்ள வேண்டும்.
நாம் ஏதேனும் ஒரு பதவியில் அமர்த்தப்பட்டாலோ அல்லது வாரிசு அடிப்படையில் நமக்கு செல்வம் கிடைத்தாலோ அப்போதும் நல்லோர்களின் அறிவுரைகளைத் தேடவேண்டும். நம்மையும் மற்றவர்களையும் உறுதிப்படுத்த வேண்டும். அல்லாஹ் முஃமின்களுக்கு பாதுகாவலனாக இருக்கின்றான்.
15-சொர்க்கத்தின் அருட்பாக்கியங்களையும் நரகத்தின் வேதனையையும் சிந்தனை செய்து பார்க்க வேண்டும். மரணத்தை நினைவு கூர வேண்டும்.
சொர்க்கம் மகிழ்ச்சிக்குரிய இடமாகும். முஃமின்களுடைய பயணத்தின் கடைசி எல்லையாகும். தியாகங்கள் மற்றும் நற்காரியங்கள் செய்யாமல்; எதிலும் உறுதியில்லாமல் இருப்பதே மனித உள்ளத்தின் இயல்பு. ஆனால் அவற்றைச் செய்வதால் அவன் பாதையில் ஏற்படுகின்ற கஷ்டங்களும் சிரமங்களும் இலகுவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தாலே ஒழிய.
எனவே செயல்களுக்கான கூலியைத் தெரிந்து கொள்பவனுக்கு அச்செயல்களில் உள்ள சிரமம் இலகுவாகிவிடும். தொடர்ந்து செயல்படுவான். நாம் இவற்றில் உறுதியாக, ஸ்திரமாக இல்லையென்றால் வானங்கள் மற்றும் பூமி அளவுக்கு விசாலமான சொர்க்கம் நமக்குக் கிடைக்காமல் போய்விடும் என்பதைப் புரிந்து கொள்வான்.
அதுபோல மரணத்தை நினைவு கூருவது ஒரு முஸ்லிமை மார்க்கத்திலிருந்து சறுகிவிடாமல் பாதுகாப்பதோடு அல்லாஹ் விதித்த வரம்புகளில் அவனை நிலைநிறுத்துகின்றது. அவற்றை அவன் மீறமாட்டான். ஏனெனில் அவன் தன்னுடைய கடைசி நேரம் இன்னும் சில நொடிகளில் வந்துவிடும் என்பதை அறிந்து கொள்வானேயானால் அவன் மார்க்கத்திலிருந்து சறுகிவிடவோ அல்லது அசத்தியத்தில் பிடிவாதமாக இருக்கவோ அவனது உள்ளம் எங்ஙனம் தூண்டும்? இதனால்தான் நபி (ஸல்) அவர்கள், மரணத்தை அதிகமதிகம் நினைவு கூருங்கள் என்று கூறியுள்ளார்கள்.(திர்மிதி)
உறுதியோடு இருக்கவேண்டிய சந்தர்ப்பங்கள்
1- சோதனை ஏற்படும் போது.
உள்ளத்தில் ஏற்படுகின்ற புரள்வுகளுக்கு சோதனைகள் காரணமாகின்றன. இன்பம், துன்பம் போன்ற சோதனைகளை உள்ளம் சந்திக்கின்றபோது எவர்களுடைய உள்ளங்களில் ஈமான் நிரம்பியிருக்கின்றதோ அப்படிப்பட்ட பொறுமையாளர்கள் தான் உறுதியோடு இருக்கமுடியும்.
சோதனைகள் பல வகைகளாகும்
செல்வம், பதவி
செல்வம், பதவி ஆகிய இவ்விரண்டு சோதனையின் அபாயத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதன் பதவிக்கும் காசுக்கும் பேராசைப்படுவது ஆடுகளுடன் அனுப்பப்பட்ட பசியுள்ள இரண்டு ஓநாய்களை விடவும் தன் மார்க்கத்திற்கு மிகவும் கெடுதி இழைக்கக் கூடியது. (அஹ்மத்).மனைவி, குழந்தைகள், கொடுமை, அநீதி, அக்கிரமம், தஜ்ஜாலுடைய குழப்பம்
2- அறப்போராட்டதில் உறுதியுடன் இருத்தல்
3- செயல் திட்டத்தின் மீது உறுதியுடன் இருத்தல்
4- மரணதருவாயில் உறுதியோடுஇருத்தல்
துன்பம் சூழ்ந்த கடுமையான நேரத்தில் இறைநிராகரிப்பாளர்களுக்கும் பாவிகளுக்கும் உறுதி கிடைக்காமல் போய்விடுகின்றது. அதனால் மரணதருவாயில் அவர்களால் ஏகத்துவக் கலிமாவை மொழிய முடியாது. இது கெட்ட முடிவின் அடையாளமாகும். எவ்வாறெனில் அப்படிப்பட்ட ஒரு மனிதனிடம் அவனுடைய மரணதருவாயில் லாயிலாஹ இல்லல்லாஹ் கூறுமாறு சொல்லப்பட்டால் அவன் தலையை வலது புறமும் இடது புறமும் அசைப்பானே தவிர அவ்வார்த்தையை மொழியமாட்டான். இன்னொருவன் அவனுடைய மரணதருவாயில், இது நல்ல பொருள்! இது மலிவாகக் கிடைக்குமே! என்று கூறுவான். மூன்றாமவன், அந்நேரத்தில் செஸ் காய்களின் பெயர்களை நினைவு கூருவான். நான்காமவனோ சில ராகங்களை அல்லது பாடல் வரிகளைப் பாடுவான். அல்லது தன் காதலியை நினைவு கூருவான்.
இது ஏனென்றால் இதுபோன்ற விஷயங்கள் உலகில் அவர்களை அல்லாஹ்வை நினைவு கூருவதை விட்டும் வேறுவழியில் ஈடுபடுத்தி விட்டன. இத்தகையவர்களின் உயிர் வெளியேறுகின்ற நேரத்தில் சிலசமயம் அவர்களுடைய முகங்கள் கருப்பாகவும் நாற்றமடிக்கக்கூடியதாகவும் கிப்லாவை விட்டும் திரும்பக்கூடியதாகவும் இருக்கும். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.
ஆனால் நபி வழியில் நடந்த நல்லோர்களுக்கு அல்லாஹ் அவர்களுடைய மரணதருவாயில் உறுதிப்பாட்டுக்கான பாக்கியத்தை வழங்குவான். அதன்படி அவர்கள் ஏகத்துவக் கலிமாவை எளிதாக மொழிந்து விடுவார்கள். அவர்களுடைய உயிர் வெளியேறுகின்ற நேரத்தில் அவர்களுடைய முகங்கள் சில சமயம் பிரகாசமாகவும், நறுமணம் உடையதாகவும், ஒருவித மகிழ்ச்சியோடும் காணப்படும்.

Recent Comments